மெய்யோ பொய்யோ


நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
நீங்களெல்லாம்
சொற்பனந்தானா? -- பல
தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே,
நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? -- உம்முள்
ஆழ்ந்த பொருளில்லையோ?   

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,
நீங்களெல்லாம்
கானலின் நீரோ? -- வெறுங்
காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற்
புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ? -- இந்த
ஞாலமும் பொய்தானோ?   

காலமென்றே ஒருநினைவும்
காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ? -- அங்குக்
குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம்
தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? -- இதைச்
சொல்லொடு சேர்ப்பாரோ?   

காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்த தெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே -- நித்தம்
விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம்,
காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் -- இந்தக்
காட்சி நித்தியமாம்.

- மகாகவி பாரதியார் 

அஜய் ரிஹானின் பார்வையில் பொருள் விளக்கம்  :

உலகில் இருக்கும் அனைத்தையும் ஒரு வியப்போடும், ஆழ்ந்த சிந்தனையோடும், விசாலமான பார்வையோடும் பாடுகிறான் பாரதி.

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே,
நீங்களெல்லாம்
சொற்பனந்தானா? -- பல
தோற்ற மயக்கங்களோ?

இங்கு நடந்து கொண்டும், நின்று கொண்டு இருக்கும் உயிரினங்களும் சரி, வானிலே சிறகடித்து பறந்து கொண்டும் பறவையாயினும் சரி எல்லாம் வெறும் கனவோ ? இல்லை வெவ்வேறு தோற்றங்கள் (உருவங்கள்) கொண்டு என்னை மயக்கும் வடிங்களோ ?

கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே,
நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? -- உம்முள்
ஆழ்ந்த பொருளில்லையோ?   

செவி வழியாய் கற்றதும், விழி வழியாய் பார்த்துணர்ந்து அறிந்ததும், உண்மை இதுவென்று கருதிக் கொண்டிருப்பதும், வெறும் மாயையோ? (உண்மை இல்லாதது) காணும் ஒவ்வொன்றிலும் ஆழமான உண்மைகள் ஏதும் இல்லையோ? பொருள் இல்லாத ஒரு வாழ்க்கையோ ?

வானகமே, இளவெயிலே, மரச்செறிவே,
நீங்களெல்லாம்
கானலின் நீரோ? -- வெறுங்
காட்சிப் பிழைதானோ?

பரந்து விரிந்திருக்கும் வானமே, மிதமான சூரிய வெப்பத்ததோடு கலந்த குளிர்ச்சிக் காற்றும், அடர்த்தியான மரங்கள் கொண்ட சோலைகளே, நான் காணும் நீங்களெல்லாம் சில நேரம் மட்டுமே தோன்றி மறையும் கானல் நீரோ - என் கண்களை ஏமாற்றும் காட்சிப் பிழைகளோ (பொய்களோ)?

போனதெல்லாம் கனவினைப்போற்
புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ? -- இந்த
ஞாலமும் பொய்தானோ?    

இங்கு தங்கி வாழ்ந்தவர் /வாழ்ந்தது யாதும் இங்கிருந்து போன பின்னே அவர்களும் / அவைகளும் வெறும் கனவு போலே மண்ணுள்ளே புதைந்து அழிந்து போனது, அது போலவே நானும் வெறும் ஒரு கனவு தானோ ? நான் கற்றறிந்த அறிவும், கொண்ட ஞானமும் பொய்யோ ?

காலமென்றே ஒருநினைவும்
காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ? -- அங்குக்
குணங்களும் பொய்களோ?

நேரம், காலம் சார்ந்து நான் கொண்ட நினைவுகளும், கண்ட காட்சிகள் உண்மை என்று நம்பி நான் கொண்ட பல நினைவுகளும் உண்மையானதல்லவோ ? நான் இந்த தேகத்தின் மீது கொண்டுள்ள மனிதன் என்ற கோலம் பொய் என்றால், அதை சார்ந்து நான் கொண்ட குணங்களும் பொய்களோ ?

சோலையிலே மரங்களெல்லாம்
தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? -- இதைச்
சொல்லொடு சேர்ப்பாரோ?    

ஆழ்ந்த சிந்தனையிலே, அழகான மரங்கள் தோன்றியதன் ஆதாரம் விதை என்றால், இந்த சோலை என்பது பொய்யாகுமோ ? இதை ஆழ்ந்த கருத்துள்ள நியாயத்தை ஞானத்தோடு சேர்த்து உரைப்பது யாரோ ? சொன்னால் ஏற்றுகொள்பர் யாரோ ?

காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்த தெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே -- நித்தம்
விதிதொடர்ந் திடுமோ?

காணும் உயிர்களும், பொருள்களும் மறைந்து போகும் என்றால், அப்போது மறைந்தது எல்லாவற்றையும் மீண்டும் காண இயலுமோ ? இது போலவே மறைந்த உயிரும் மீண்டும் உடல் புக சாத்தியமோ ? இப்படியே வீணாகி போகும் பொய்களிலே தினம் தினம் என்னுடைய விதியானது தொடர்ந்து போய்விடுமோ ?

காண்பதுவே உறுதிகண்டோம்,
காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் -- இந்தக்
காட்சி நித்தியமாம்.

காணும் நிஜங்கள் மட்டுமே உண்மை என்ற திடமான எண்ணம் கொண்டோம், காணாத யாவும் நிஜமில்லை, பொய்கள் என எண்ணினோம். காணும் நிஜங்கள் சக்தியின் ஸ்வரூபம், காணும் இந்த காட்சி மட்டுமே நிஜமாகும்.

- அஜய் ரிஹான்

கருத்துகள்

கருத்துரையிடுக