சுட்டும் விழிச் சுடர் தான்

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ

சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று

- மகாகவி பாரதியார்

கண்ணம்மாவின் அழகில் மூழ்கி மகாகவிஞன் எழுதிய மடலின் பொருள் விளக்கம்: 

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ

கண்ணம்மா..!!

உன் கண்களில் இருந்து வெளிப்படுகின்ற ஒளி இரண்டும் சூரிய கதிர்களை போன்றும், குளிர்ந்த நிலவொளி போலும் ஒளிர்கிறது. தூய்மையான கருமையான வானம் போலே  வட்ட வடிவில்  அழகிய  கருமையான கண் விழிகளை உடையவளே என் கண்ணம்மா.

நீ உடுத்திய கருநீலத்திலான பட்டுப் புடவையில் பதித்த நல்ல வைரங்கள் அனைத்தும் இரவில் நட்சத்திரங்களாய் மின்னுதடி.

சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்

நந்தவனத்தில் பூத்துக்குலுங்கும் மலர்களின் ஒளி என்னவென்று குழம்பிப்போனேன், சிறிது நேரத்தில் அது என்னை மயக்கும் உன்னுடைய சுந்திர (அழகிய) புன்னகை என்று அறிந்து கொண்டேன்.

கூவும் குயில்களின் ஓசையெல்லாம் உன்னுடைய குரலாக கேக்குதடி என் கண்ணம்மா. பேரழகியே என் கண்ணம்மா, உன்னழகில் மயங்கி மீளா காதல் கொண்டேனடி.

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று

வரைமுறைகள் (சாஸ்திரங்கள்) நமக்கெதற்கு கண்ணம்மா?  பொறுமையிழந்தவர்க்கு சாஸ்திரங்கள் எதுவுமில்லையடி கண்ணம்மா, காதலின் எல்லையை கடந்து விட்ட என்னை தடுத்து நிறுத்தும் சக்தி வரைமுறைகளுக்கு இல்லையடி.

அனுமதி வாங்கி, முன்னோர்கள் முன்னிலையில் திருமணச் சடங்கெல்லாம் பின்னர் பார்த்துக்கொள்வோம், இன்னமும் காத்திருப்பேனோ? காதலின் அணை உடைந்து பெருகி வரும் ஆசை முத்தத்தை பெற்றுக்கொள்ளடி உன் கன்னங்களில்.

- அஜய் ரிஹான்

கருத்துகள்

கருத்துரையிடுக