சின்னஞ்சிறுகிளியே - கண்ணம்மா



சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!
என்னைக்  கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்! (சின்னஞ்சிறு)

பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே   
ஆடிவருந்  தேனே (சின்னஞ்சிறு)

ஓடி வருகையிலே- கண்ணம்மா! 
உள்ளம் குளிருதடீ!
ஆடித்திரிதல்  கண்டால் உன்னைப்போய்
ஆவி தவிழுதடி!!

உச்சிதனை முகந்தால்  - கருவம்
ஓங்கி வளருதடி!
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ!!

கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான்
 கள்வெறி கொள்ளுதடீ!
உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா
 உன்மத்த மாகுதடீ!!

உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில்
 உத்திரங்  கொட்டுதடி!
என் கண்ணில்  பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர்  நின்னதன்றோ!!

- மகாகவி பாரதியார்  

அந்த மகா கவிஞனின் எழுத்தூற்றுக்கு பொருள் விளக்கம் தேவையில்லை, இருப்பினும் என் ரசனையில் சில விளக்கத் துளிகள் இதோ :

கண்ணம்மா - பாரதியின் செல்ல மகள் 


" சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!
என்னைக்  கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்! (சின்னஞ்சிறு) "

என் செல்லமான கிளியே (கண்ணம்மா), என்னுடைய பொக்கிஷமே, (களஞ்சியம் - ஒரு பொருளை அதிகமாக சேமித்து வைக்கும் இடம்) என்னுடைய துன்பங்கள் எல்லாவற்றையும் தீர்த்து என் வாழ்வில் செழுமை புகத்த வந்தாயே கண்ணம்மா


" பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே  
ஆடிவருந்  தேனே (சின்னஞ்சிறு) "

அமுதே, கனியே என் கண்ணம்மா - தங்க ஓவியம் போலே என் முன்னே பேசி சிரிக்கும் அழகே, உன்னை அள்ளி அணைக்கும் பொழுதிலே தேன் போலே இன்பம் பொங்கி வருகிறதே கண்ணம்மா.

" ஓடி வருகையிலே- கண்ணம்மா!
உள்ளம் குளிருதடீ;
ஆடித்திரிதல்  கண்டால் உன்னைப்போய்
ஆவி தவிழுதடி "

நீ என்னை பார்த்து ஓடி வருகையில் என் உள்ளம் குளிர்ந்து போகிறதடி கண்ணம்மா, நீ அங்குமிங்கும் ஓடி ஆடி விளையாடுவதை பார்க்கும் வேளையிலே என்னுடல் ஆவியும் ஓடி வந்து உன்னை தழுவிக்கொள்ள பேரரசை கொள்கிறதடி கண்ணம்மா.

 " உச்சிதனை முகந்தால்  - கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ. "
 
தந்தையென நானும் உன் உச்சி முகர்ந்து பார்க்கையிலே எனக்குள் கர்வம் எல்லையில்லாமல் வளர்ந்து நிற்குதடி, உன்னை புகழ்ந்து ஊர் மக்கள் பேசுவதை என் செவிகள் கேட்கும் பொழுது என் உடல் கூச்சம் / சிலிர்ப்பு கொள்கிறது என் செல்லமே.

" கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ
உன்னை தழுவிடிலோ- கண்ணம்மா
உன்மத்த மாகுதடீ."

என் கன்னத்தில் நீ முத்தமிட்டால், உள்ளம் கள் (மது) குடித்தது போன்ற பேரின்ப வெறி கொள்கிறது. உன்னை அரவணைக்கையிலே நானும் மயக்கம் கொண்டேனடி கண்ணம்மா.

" உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில்
உத்திரங்  கொட்டுதடி
என் கண்ணில்  பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர்  நின்னதன்றோ! "

என் கண்ணே, உன் கண்ணில் கண்ணீர் வரும் நிலையை நான் காண நேர்ந்தால் அது என் இதயத்தில் இருந்து கொட்டும் ரத்தம் ஆகாதோ ? என் இமைகளுக்குள் வாழும் அழகுப் பதுமையே (பொம்மை) நான் வாழும் வாழ்க்கையும் எனது உயிரும் உனக்கானதன்றோ !!

- அஜய் ரிஹான்


கருத்துகள்

  1. பாரதியின் கண்ணம்மாவிற்கு அழகான விளக்கம் தந்தீர் ...அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் ஸ்வேதா மோகனின் கள்வெறி கொள்ளும் கானம்...அருமை

    பதிலளிநீக்கு
  2. அருமையான விளக்கம்

    பதிலளிநீக்கு
  3. தழுவுதடி -தவிழுதடி அல்ல; அழகான தமிழ்ச் சொற்களுக்கு சமஸ்கிருத சொற்களில்உரை.(உ.ம்) செல்வக் களஞ்சியம் -பொக்கிஷம். ; பொற்சித்திரம்-தங்க ஓவியம். வேடிக்கைதான்.

    பதிலளிநீக்கு
  4. எழுத்துப் பிழைகள் மட்டுமல்ல; பல கவிதையடிகளுக்குத் தவறான பொருள் கொண்ட விளக்கங்களையும் உள்ளீடு செய்யப் பட்டுள்ளன. அன்புகூர்ந்து திருத்துக.
    இவண் ~~>
    பாரி, காரைக்குடி.

    பதிலளிநீக்கு
  5. மேலும் பல வடமொழிச் சொற்களும் கையாளப் பட்டுள்ளன.
    எடுத்துக் காட்டு :-
    பொக்கிஷம்.
    'களஞ்சியம்' என்றால் 'கருவூலம்' - செல்வங்கள் நிரம்பியிருக்குமிடம்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக