நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா !
நின்னைச் சரணடைந்தேன் !
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா !
நின்னைச் சரணடைந்தேன் !
நின்னைச் சரணடைந்தேன் !
மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று
நின்னைச் சரணடைந்தேன் !
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவுபெறும் வணம்
நின்னைச் சரணடைந்தேன் !
துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா !
நின்னைச் சரணடைந்தேன் !
நின்னைச் சரணடைந்தேன் !
நல்லது தீயது நாமறியோம் அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!
நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா !
நின்னைச் சரணடைந்தேன் !
நின்னைச் சரணடைந்தேன் !
- மகாகவி பாரதியார்
பாரதியார் தனது குலதெய்வத்திடம் தன் குறைகளை சொல்லி பாடுவது போல
நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா !
நின்னைச் சரணடைந்தேன் !
உன்னை சரண் அடைந்து விட்டேன் என் தாயே (பராசக்தியே), உன்னை மட்டுமே சரணாகதி என்று வந்து விட்டேன் தாயே !
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
தங்கம் போன்ற பொருட்கள் மீதான மோகமும், வாழ்க்கையில் உயர்வும், புகழையும் மட்டுமே விரும்பி ஓடி அலையும்படியான எண்ணங்களும், இது போன்ற தேவையற்ற கவலைகள் என்னை துன்புறுத்தாது பார்த்துக் கொள்வாய்யென நம்பி உன்னை சரண் அடைந்தேன் தாயே.
மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று
வறுமையும், பயமும் என் இதயத்துள் புகுந்து என்னை வேட்டையாடுகின்றது, இது போன்று என்னை கொல்லும் யாவிலும் இருந்து என்னை காப்பாய் என உன்னை சரண் புகுந்தேன் தாயே.
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவுபெறும் வணம்
என் செயலென்று ஏதுமில்லை, எனது எனது என எண்ணித் தவிக்காது அத்துணை செயலையும் உன் பாதங்களில் சமர்ப்பணம் செய்து விட்டேன், இனி என் செயல் யாவும் உன்னுடைய எண்ணம் போலே நடந்து நிறைவு பெறுமாறு செய்து தருவாய் என சரண் அடைந்து விட்டேன் தாயே உனையே.
துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
இனி துன்பம் என்னும் வார்த்தைக்கே இடம் இல்லை இங்கு, உடலும், மனதும் சோர்வென்பதே அறியாது உன்னுடைய புகழ் பாடி திளைத்திடுவேன், தோல்வி பயமே என்னை அண்டாது, அன்பு என்னும் நெறியில் அறங்கள் யாவும் வளர்ந்து செழிப்புறவே நீயும் அருள் செய்வாய் என உன்னை சரண் அடைந்தேன் தாயே.
நல்லது தீயது நாமறியோம் அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!
எனக்கு நல்லது, தீயது எதுவென்று நான் அறிந்தவனில்லை, அதை பகுத்தறியும் வல்லமை என் அன்னை நீயே தந்திடுவாய், உலக மக்கள் யாவருக்கும் நல்லதை காட்டி நன்மை நிலை நாட்டுவாய், தீயது அழித்து தர்மம் காப்பாய் தாயே. உன்னை அன்றி சரண் புக வேறொருவருமில்லை தாயே - உன்னையே சரண் அடைந்தேன்.
- அஜய் ரிஹான்
பராசக்தியே என்னை காத்தருள்வாய் ...அகமும் புறமும் தீமை என்னை தீண்டா வண்ணம் காத்தருள்வாய் ...பராசக்தியே
பதிலளிநீக்கு"தோற்பிலை.... "-- வார்த்தைப் பிரயோகத்தில் பாரதி ஒரு கில்லாடி!
பதிலளிநீக்கு